வல்சாத்:குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற குழந்தைகள் திறமை தேடல் போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றுதான் 'எனது முன்மாதிரி நாதுராம் கோட்சே'.
இந்தத் தலைப்பில் பேசிய மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது. இந்தக் குழந்தைகள் திறமை தேடல் போட்டி வல்சாத்தில் உள்ள குசம் வித்யாலாயா பள்ளியில் நடைபெற்றது. ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற இப்போட்டியில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
'எனது முன்மாதிரி நாதுராம் கோட்சே' தலைப்பில் அம்மாணவன், மகாத்மா காந்தியை விமர்சித்தும் - கோட்சேவை நாயகனாகச் சித்திரித்தும் பேசியுள்ளார். மாணவர்களுக்கான இப்போட்டியைத் திட்டமிட்டு அதற்கான தலைப்புகளை மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அலுவலர் இறுதிசெய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.