அகமதாபாத்:அரபிக்கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல் இன்று (ஜூன் 15) மாலை கரையைக் கடக்கவுள்ளது. இன்று காலை நிலவரப்படி, பிப்பர்ஜாய் புயல் குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கு தென்மேற்குப் பகுதியில் 200 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும், அது இன்று மாலை 5.30 மணிக்குள் கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல், பாகிஸ்தானின் கெட்டிபந்தர் துறைமுகத்திற்கும், குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை:
பிப்பர்ஜாய் புயல் காரணமாக நேற்று குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிக கனமழை பெய்தது. இன்று கட்ச், துவாரகா, ஜாம்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புயல் காரணமாக நேற்று மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று முதல் மும்பையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
ராணுவம், கடற்படைத் தயார்:
புயல் கரையைக் கடப்பதையொட்டி குஜராத்திலும், பாகிஸ்தானின் சிந்து உள்ளிட்ட மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புயலால் பெரும் சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.
குஜராத்தில் எட்டு கடலோர மாவட்டங்களில் இருந்து, 74,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கடற்கரையில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது. ராணுவப்படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
குஜராத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய கடற்படையின் நான்கு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, போர்பந்தர் மற்றும் ஓகா ஆகிய இரு இடங்களிலும் ஐந்து நிவாரணக் குழுக்கள் தயாராக உள்ளன. ஐஎன்எஸ் வல்சுரா கப்பலில் 15 நிவாரணக் குழுக்களுடன் அதிகாரிகள் தயாராக உள்ளனர். குஜராத்துக்கு உடனடி போக்குவரத்துக்காக கோவா மற்றும் மும்பையிலும் கடற்படை ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
உயர்மட்ட ஆலோசனை:
நேற்று குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், புயல் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதேபோல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புயலின் தாக்கத்தை கையாள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக ஆய்வு செய்தனர்.
துவாரகாதீஷ், சோம்நாத் கோவிலுக்குச் செல்ல தடை:
ஜகாவ் துறைமுகத்திற்கு அருகே புயல் கரையைக் கடக்கவுள்ளதால், துவாரகா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீஷ் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றாலும், தினசரி பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் இன்று திறந்திருக்கும் என்றும், ஆனால் பக்தர்கள் வர வேண்டாம் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Cyclone Biparjoy: குஜராத்தை நெருங்கும் பிப்பர்ஜாய் புயல்.. அலர்ட் நிலையில் அரசு!