அகமாதாபாத்: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பஞ்சாபைத் தவிர ஏனைய நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
தேர்தல் வெற்றிக்குப்பின் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை வருகைபுரிந்து பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெற்றி குறித்து உரையாற்றினார்.
பஞ்சாயத்து ராஜின் முக்கியத்துவம்
தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளான இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி வருகைதந்துள்ளார். இரு நாள் சுற்றுப் பயணமாக குஜராத் வந்தடைந்த பிரதமருக்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்.
குஜராத் வீதியுலா வந்த பிரதமர் மோடி இதையடுத்து, தலைநகர் அகமாதாபாத்தில் உள்ள மகா-பஞ்சாயத்து சம்மேளனத்தின் மைதானத்தில் மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, பேசிய அவர் , "நாடு தனது 75ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடிவரும் நிலையில், கிராமப்புற வளர்ச்சியை மக்கள் உறுதிசெய்ய வேண்டும். கிராம சுயாட்சியை நினைவாக்க வேண்டும் என்றால் பஞ்சாயத்து ராஜின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
ஜனநாயகம் அளித்துள்ள அதிகாரம்
குஜராத்தின் ஒளிமையான எதிர்காலம் குறித்து ஒன்றரை லட்சத்திற்கும் மேலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமர்ந்து விவாதிக்கின்றனர். இதைவிட சிறந்த அதிகாரமோ, வாய்ப்போ வேறு ஏதுமில்லை. பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் பெண்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது’’ என்றார்.
மேலும், குஜராஜ், பாபு (காந்தி) மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் மண் எனவும்; பாபு தனது வாழ்நாள் முழுவதும் ஊரக வளர்ச்சி குறித்தும், கிராம தற்சார்பு குறித்தும் சிந்தித்தவர் என்றும் கூறினார்.
குஜராத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டது. 33 மாவட்ட பஞ்சாயத்துகள், 248 தாலுகா பஞ்சாயத்துகள், 14,500 கிராம பஞ்சாயத்துகள் இதில் அடக்கம். இதில், மொத்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானப் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நாளை (மார்ச் 12) தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர், இரு நாள் பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இப்போதே தனது பணிகளை பிரதமர் தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வெற்றியுடன் தாய் மண்ணுக்கு திரும்பிய பிரதமர் - வழிநெடுக உற்சாக வரவேற்பு