குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுவன் தைர்யராஜூக்கு, முதுகுத்தண்டில் மரபணு சார்ந்த பிரச்னை இருந்துள்ளது. நெடுநாளாக இப்பிரச்னையால் அவதிப்பட்டு வந்த தங்கள் மகன் தைர்யராஜை குணப்படுத்த சிறுவனின் பெற்றோர் பல வழிகளில் போராடினர்.
ஆனால், சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு முறை செலுத்தப்படும் ஊசியான 'ஜோல்ஜென்ஸ்மா' (Zolgensma) என்ற மருந்தை வாங்கி வரப் பரிந்துரைத்தனர். இந்த மருந்தை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என விசாரித்த சிறுவனின் பெற்றோருக்கு, மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதிக விலையுடைய அந்த மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய அதிகளவில் நிதி தேவைப்பட்டது. ஆனால் சிறுவனின் பெற்றோருக்கு இது பெரியத்தொகை என்பதால், மகனின் சிகிச்சைக்கான நிதித் திரட்டத் தொடங்கினர். கிட்டத்தட்ட 71 நாள்களில், 2 லட்சத்து 64 ஆயிரத்து 660 பேர் நிதியுதவி செய்ததில், தைர்யராஜின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது.