அகமதாபாத்:குஜராத் மாநிலம் பாலம்பூரில் நேற்றிரவு 11:30 மணியளவில் சுயேச்சை எம்எல்ஏவும் பட்டியலினத் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, அசாம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் அகமதாபாத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த திடீர் கைது நடவடிக்கைக்கான காரணம் குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை என்று கண்டனங்கள் எழுந்தன.
இதுகுறித்து, கோக்ரஜார் காவல்துறை கண்காணிப்பாளர் துபே பிரதீக் விஜய்குமார் கூறுகையில், "குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அசாம் மாநிலத்தின் கோக்ரஜார் மாவட்ட பாஜக தலைவர் அருப் குமார் புகார் அளித்தார். அதனடிப்படையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜிக்னேஷ் மேவானி மீது 120பி (குற்றச்சதி), பிரிவு 153(ஏ) (இரு சமூகத்தினரிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295(ஏ), 504 (அமைதியை சீர்குலைத்தல்) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது சமூக வலைதளப்பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய ட்வீட்டும் நீக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.