அகமதாபாத் :182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் வெற்றி பெற்றது.
குஜராத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ ஓராண்டு நிறைவு பெற்று உள்ளன. இந்நிலையில், ஜுனாகர்க் மாவட்டம் விசவதார் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ பூபேந்திர பயானி, தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். காந்திநகரில் சட்டப்பேரவை சபாநாயகர் சங்கர் சவுத்ரியை நேரில் சந்தித்த பூபேந்திர பயானி, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
என்ன காரணத்திற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பூபேந்திர பயானியின் ராஜினாமாவை சபநாயகர் சங்கர் சவுத்ரி ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு 5 எம்.எல்.ஏக்களை பெற்றது.