Murder:சூரத்: குஜராத் மாநிலம், சூரத்தில் கடந்த 15ஆம் தேதி, ஒருவரை தூக்கிக் கொண்டு மற்றொருவர் சாலையில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வேகமாகப் பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சியில் சாலையில் சென்ற நபர் தனியார் பள்ளியில் ஓட்டுநராகப் பணியாற்றும் சோஹில் சுபேதார் சிங் என்றும், அவர் தூக்கிச் சென்ற நபர் ரமேஷ்சந்திர உபாத்யாய் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
ரமேஷ் சந்திர உபாத்யாய் தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், சுபேதாருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இரவில் தாமதமாக வரும் சுபேதார், அறைக் கதவை திறக்கச் சொல்லி பலமாக தட்டியதாகவும், பெரும்சத்தமாக கதவை மூடியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்ட நிலையில், சுபேதார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த உபாத்யாய் சுருண்டு கீழே விழுந்துள்ளார். சக நண்பர் சுருண்டு விழுந்ததைக் கண்டு பயந்து போன சுபேதார், நண்பரின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தூக்கிச் சென்றதாக போலீசார் கூறினர்.
சுபேதார் தாக்கியதில் உபாத்யாய் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர் உயிரிழந்தது தெரியாமல் அவரது சடலத்தை தூக்கிக் கொண்டு சுபேதார் சாலையில் பதற்றத்துடன் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து சுபேதாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:WEF 2023: டாப் 30 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் தெலங்கானா CM-ன் மகன்