அகமதாபாத்: குஜராத்தின் வதோதரா நகரில் நேற்று (ஜூன் 24) 4 தளங்களை கொண்ட தனியர் மேல் நிலைப்பள்ளி கட்டடத்தில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், " நான்கு மாடி கொண்ட பள்ளி கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் நான்கு குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் இருந்தன/
மூன்றாவது மாடியில் உள்ள ஸ்விட்ச்போர்டில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் தான் தீ விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. தீ பரவல் மிதமாக இருந்தாலும், மூன்றாவது தளம் முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்து காணப்பட்டது.
முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருந்த மாணவர்கள் சரியான நேரத்தில் வெளியே வந்தனர். புகை சூழ்ந்து இருந்ததால் மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். மூச்சுத்திணறல் கருவியைப் பயன்படுத்தி, இரண்டு தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து மூன்றாவது மாடியில் தீயை அணைத்தனர், பின்னர் புகையை அகற்ற ஜன்னல்களைத் திறந்தனர்.
இதனையடுத்து, புகை வெளியேறிய பிறகு, கட்டிடத்தின் பிரதான மற்றும் அவசரகால வழிகளில் இருந்து ஏணியைப் பயன்படுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினோம். இதில் ஒரே ஒரு மாணவருக்கு மட்டும் முழங்காலில் லேசான காயம் ஏற்பட்டது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தேசிய கட்சிகளின் ஆதரவு உள்ளது - எம்.எல்.ஏக்களிடம் ஏக்நாத் ஷிண்டே உறுதி