மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள், மீதான வரி குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், " கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவப் பொருள்களுக்கு இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்படும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கரோனா சிகிச்சை கருவிகளுக்கும், மருந்துகளுக்கும் வரிவிலக்கு அளிப்பது தொடர்பாகக் குழு அமைத்து விரைவில் முடிவு செய்யப்படும்.
தற்போது, தடுப்பூசிகளுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி உள்ளது. கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகளும் வரிவிலக்கு பட்டியலில் சேர்க்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்த ஜிஎஸ்டி கூட்டமானது, தடுப்பூசி இறக்குமதியில் எவ்வித வரிவிலக்கு அளிக்காமல் முடிந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.