இந்திய விமான போக்குவரத்துத் துறையில் ஒரு காலத்தில் கோலோச்சிய ஏர் இந்தியா நிறுவனம், தற்போது வர்த்தகச் சரிவின் காரணமாக பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஏறத்தாழ 90,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவிக்கும் அந்நிறுவனத்தை விற்பனைசெய்ய பலமுறை ஏல விண்ணப்பங்கள் கோரப்பட்டும் யாரும் முன்வரவில்லை என அறியமுடிகிறது.
இதனிடையே, அந்நிறுவனத்தைக் கைப்பற்ற டாடா குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தற்போது போட்டியிட்டுவருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஏர் இந்தியாவின் ஊழியர்களில் ஒரு குழு திட்டமிட்டுவருவதாக அறியமுடிகிறது. தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள ஏர் இந்தியா ஊழியர்களின் குழுவுக்கு, அதன் வணிக இயக்குநர் மீனாட்சி மல்லிக் வழிகாட்டிவருகிறார்.
ஒரு ஊழியர் 1 லட்சம் ரூபாய் முதலீடு என்ற முடிவின்படி, ஊழியர்கள் குழு பணத்தைத் திரட்ட உள்ளது. இத்திட்டத்தின்படி, ஏர் இந்தியா ஊழியர்கள் 51% பங்குகளைக் கைப்பற்ற வேண்டும் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா ஊழியர்கள் 51% பங்குகளை வைத்திருந்தால், அதன் மீதான அதிகாரம் அவர்களிடமே நீடித்திருக்கும்.