டெல்லி: நாட்டில் கரோனா பரவலின் வீரியத்தைக் கருத்தில்கொண்டும், நாட்டில் நிலவும் மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டும் மத்திய அரசு 17 மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
இந்த மருந்துப் பொருள்களை மூன்று மாதங்கள் வரை இறக்குமதி செய்ய அனுமதியளித்த அரசு, சில கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதேசமயம் மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, இறக்குமதியாளர்கள் மருந்துப் பொருள்கள் குறித்த விவரங்களைத் தகவல்களாகத் தெரிவித்தால்போதும் எனக் கூறப்பட்டுள்ளது. இது நடைமுறையில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கும்வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நெபுலைசர்ஸ், ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்ஸ், சிபிஏபி, பிஐபிஏபி கருவிகள் உள்ளிட்ட 17 மருந்துப் பொருள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துப் பொருள்களில் ஆக்சிஜன் தொடர்பான மருந்துப் பொருள்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மருந்துப் பொருள் இறக்குமதிக்குத் தளர்வுகள் அறிவிப்பு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் குறித்த தகவல்களை இறக்குமதி செய்யப்படும் மாநிலத்தில் உள்ள அலுவலர்களுக்கு இறக்குமதியாளர்கள் தெரிவிக்க வேண்டும். அவசர கால சுகாதாரத் தேவைகளுக்கான கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இது குறித்து தெரிவித்துள்ளது.
அதேசமயம் மருந்துப் பொருள்கள் குறித்த தகவல்களைச் சுங்கத் துறையினரின் தணிக்கைக்கு முன்னதாகத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.