பெங்களூரு (கர்நாடகா): சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி விமான நிலையத்தில் டிஜி யாத்ரா (Digi Yatra) சேவையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், “தற்போது டெல்லி, வாரணாசி மற்றும் பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில் டிஜி யாத்ரா சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்திற்குள் ஹைதராபாத், புனே, விஜயவாடா மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு விமான நிலையங்களில் டிஜி யாத்ரா தொடங்கப்படும். அதனைத்தொடர்ந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் டிஜி யாத்ரா சேவை தொடங்கப்படும்.
தற்போது ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் டிஜி யாத்ரா சேவையில் இணைந்துள்ளன. இது விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் இருக்கும் நேர விரயத்தை நான்கில் ஒரு பங்காக குறைக்கும். இதில் பயணிகள் இடும் தகவல்கள் பாதுகாக்கப்படும். மேலும் 24 மணி நேரத்தில் ஒருவரது தனிப்பட்ட தரவுகள் தானாகவே அழிக்கப்பட்டு விடும்” என்றார்.
எவ்வாறு செயல்படுகிறது? டிஜி யாத்ரா சேவையை ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இந்த டிஜி யாத்ரா சேவையை பெற, ஒரு பயணி ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் சுய படப் பிடிப்பைப் (Selfie) பயன்படுத்தி தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்யப்பட வேண்டும்.