டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் அமைப்பினர் டெல்லியில் பல நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. சில நாள்களுக்கு முன்பு விவசாயிகளை காவல் துறையினர் தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் குறித்து பலரும் கருத்துகளையும், மத்திய அரசிற்கு கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் வீட்டில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இன்று பிற்பகல் மூன்று மணியளவில் விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம் என்றார். அப்போது அவர்களின் கோரிக்கைகள் குறித்து தெளிவாக ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசு இன்று உழவர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு!