டெல்லி:இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபாத் என்னும் ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் அதிகரித்த நிலையில் இத்திட்டத்திற்கான வயது வரம்பை 2022 ஆம் ஆண்டிற்கு மட்டும் 21இலிருந்து 23 ஆக உயர்த்தியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் எளிதில் ராணுவத்தில் இணைவதற்கு அக்னிபாத் திட்டம் பாதுக்காப்புத் துறை அமைச்சகத்தால் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. கடந்த புதன்கிழமை (ஜூன்15) பீகாரில் தொடங்கிய போராட்டங்கள், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் பரவியது.
பீகாரில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்கள் எரிக்கப்பட்டன மற்றும் கல் வீச்சு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த வன்முறைப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த பீகார் அரசு அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்தது. ரயில் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டன, இணைய சேவை இடைநிறுத்தப்பட்டது.