டெல்லி:கோவிட்-19 பெருந்தொற்றை அரசு சாதாரணமாகக் கையாளுவதாகக் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரோனா நோய்க்கிருமியின் தென் ஆப்பிரிக்க, பிரேசில் வகைகள் இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கருத்தை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். "கோவிட்-19 நடவடிக்கைகளில் மத்திய அரசு பெருத்த நம்பிக்கையுடன் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறது. பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாக, ஆப்பிரிக்கா நாடுகளின் வகை கோவிட்-19 தொற்றுடன் நான்கு பேர் கண்டறியப்பட்டனர். அதில் ஒருவர் அங்கோலாவிலிருந்தும், மற்றொருவர் தான்சானியாவிலிருந்தும், இரண்டு பேர் தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவருக்குப் பிரேசில் நாட்டு வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.