புதுச்சேரி மாநில 15ஆவது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஆக.26) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு காவல் துறை சார்பாக அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அவரை சபாநாயகர் செல்வம், சட்டப்பேரவை செயலர் முனுசாமி ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை தனது உரையைத் தொடங்கினார்.
திருக்குறளுடன் உரை தொடக்கம்
அப்போது பேசிய அவர், " மருத்துவர்கள், நோயாளிகளின் நிலை, நோயின் அளவு, மருந்து கொடுக்கும் காலம் ஆகியவற்றை அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்ற திருக்குறளுக்கு ஏற்ப, கரோனா பரவியபோது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.
மின்சாரத்துக்காக 58 கோடி ரூபாய்
கரோனா தொற்று காலத்தில் பொது மக்கள் சுகாதாரத்துடன் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், சித்த, ஆயுர்வேத மருத்துவ முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கும் வகையில் அரசு சார்பில் 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இலவச பாடத்திட்டங்கள், நோட்டுகள் வழங்கல் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து 439 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரத்து 838 மாணவர்களுக்கு உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது.