'நான் தலையிட மாட்டேன்' - புதுச்சேரி ஆளுநர்
புதுச்சேரி அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டில் ஆளுநர் என்ற முறையில் தலையிட முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: வீராம்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு இன்று தொடங்கியது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சுகாதாரத் துறை இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை, “வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற இலக்கோடு புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் நான்காவது முறையாக தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. புதுச்சேரியில் நல்ல எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது மக்களிடம் தயக்கம் நீங்கி இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரியில் நேற்று முதல் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் மழை நீரை சேமிக்கலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “அமைச்சரவை இலாகா பங்கீட்டில் ஆளுநர் என்ற முறையில் நான் தலையிட முடியாது. இருப்பினும் ஆரோக்கியமான ஆலோசனை வழங்குவேன். நாளை மறுநாள் தெலங்கானா மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களுடன் என்னுடைய இரண்டாவது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள இருக்கிறேன். டெங்கு பரவாமல் இருக்க அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.