ஒன்றிய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. டெல்லியில் குடியரசுத்தலைவர் இல்லத்தில் நேற்று (ஜூலை.7) மாலை நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து புதிதாக பதவியேற்றுள்ள ஒன்றிய அமைச்சர்களுக்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் நரேந்திரமோடியின் தெளிவான வழிகாட்டுதலின்படி ஒன்றிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
நம் பாரத திருநாட்டை உலக அரங்கில் பீடு நடைபோடுவதற்கும், நம் தாய் திருநாட்டின் பெருமையை உயர்த்துவதற்கும், நம் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் ஒவ்வொரு கடைக்கோடி இந்தியருக்கும் கிடைப்பதற்கும் இந்த அமைச்சரவை செயலாற்றும் என்பது உறுதி. அனைத்து தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி இந்திய நாட்டிற்கும், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 43 புதிய ஒன்றிய அமைச்சர்கள் யார்; அவர்களின் சுயவிவரங்கள் என்ன?