புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் & சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் சார்பில் கடற்கரைத் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, தூய்மைக் கடற்கரை மற்றும் பாதுகாப்பான கடல் விழிப்புணர்வு உறுதிமொழியை ஆளுநர் வாசிக்க அனைவரும் எடுத்துக் கொண்டனர். அதன்பின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பள்ளி-கல்லூரி மாணவர்களின் நடைப்பயணம், மிதிவண்டி பேரணியை ஆளுநர் மற்றும் அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கடற்கரை மணற்பரப்பில் சிதரிக் கிடந்த நெகிழிப் பொருட்களை தூய்மைப்படுத்தும் பணியையும் தொடங்கி வைத்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "தூய்மை கடற்கரையை உருவாக்க இந்தியா முழுவதும் பல கடற்கரைகளைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதில் புதுச்சேரி கடற்கரையும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதும், மத்திய அமைச்சரே இதனை தொடங்கி வைத்திருப்பதும் நமக்கு மகிழ்ச்சி.
கடலில் போகும் நெகிழி (பிளாஸ்டிக்) எதிர்காலத்தில் மீன்களை விட அதிக அளவில் இருக்கும் என்று கூறுகிறார்கள். அதனை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை பிரதமர் நமக்கு கொடுத்திருக்கிறார். அதற்கு அவரே முன்னோடியாகவே செயல்பட்டிருக்கிறார்.
இந்த பூமியையும் கடலையும் பாதுகாப்பதில் அனைவருக்கும் கடமை இருக்கிறது என்பதை உணர்ந்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். நாமும் நெகிழிப் பொருட்களை கடலுக்குள் எரியாமல் இருப்போம். தூய்மையான புதுச்சேரியை உருவாக்குவோம்" என்றார்.
இதையும் படிங்க: பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்.10 தொடக்கம்