கொச்சி: கேரள மாநிலத்தில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தது, 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறித்து அம்மாநில உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிபுணர் குழு விதிமுறைகளை உருவாக்கும் என்றார்.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளரிடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு எனவும் அவர் கூறினார்.
மேலும், அந்த நிகழ்வு குறித்து அனைத்து அறிக்கைகளும் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சிகளில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள அனைத்து அரங்கங்களுக்கும் காவல்துறை அறிவுரைகளை வழங்கியுள்ளதாகவும், ஆனால் அதில் கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை என மாநில சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார். மேலும், உயிரிழந்த 4 பேரில் 3 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், நான்காவது நபர் வெளிநபர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கொச்சி நகர போலீஸ் கமிஷனர் அக்பர் கூறுகையில், நிகழ்ச்சிக்கு வரும் கூட்டத்தை சமாளிக்க காவல்த்துறையின் உதவியைக் கோரி பல்கலைக்கழகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ கோரிக்கை எதுவும் வரவில்லை எனத் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்களான அதுல் தம்பி, ஆன் ருப்தா மற்றும் சாரா தாமஸ் ஆகியோரின் உடல்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இறந்த நான்காவது நபர் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஆவார். பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வெளியே மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவதர்காக வரிசையில் நின்றனர். மேலும், அமைச்சர்கள் பிந்து, ராஜீவ், கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் நான்கு பேர் உயிரிழந்ததற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் இரங்கல் தெரிவித்துள்ளார். கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்ததை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” என அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து செய்தி சேனல்களில் ஆல்வின் பெயரைப் பார்த்தபோது அவரது மரணம் குறித்து தங்களுக்குத் தெரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (CUSAT) திறந்தவெளி அரங்கத்தில் இசை விழாவில் பிரபல பாடகி நிகிதா காந்தி நிகழ்ச்சி நடைபெறும் முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் தான் மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், தான் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்குள் இந்த சம்பவம் நடந்ததாகவும் பாடகி நிகிதா காந்தி அவரது முகநூல் பதிவில் தெரிவித்து உள்ளார்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களைத் தவிர மேலும் 3 பேர் களமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐசியுவிலும், 31 பேர் பொது வார்டில் உள்ளதாகவும், அவர்கள் அனைவரது உடல் நிலையும் சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில், கோழிக்கோடு அரசு விருந்தினர் மாளிகையில் அவசரக் கூட்டம் நடத்தி கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "உதயநிதியில் பலர் ஈர்க்கப்பட்டு திமுக இளைஞரணியில் சேர்கின்றனர்" - அமைச்சர் கே.என்.நேரு!