டெல்லி :நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், நேற்று (டிச. 13) 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் நாடாளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்பிக்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.
இருவரையும் பிடித்த மக்களவை உறுப்பினர்கள் அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகயை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார், 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (டிச. 15) வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடியது. அவை கூடியது முதலே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டி அமளியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குளறுபடி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் நடப்பு கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்.பிக்கள் கனிமொழி, மாணிக்கம் தாக்கூர், காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர் என மொத்தம் 14 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.