டெல்லி:பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று(ஜூலை 29) பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மரியாதைக்குரிய மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வழிகாட்டுதலும் ஆசியும் கிடைத்தது என்றும், தன்னைப் போலவே பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகிக்கும் அவரைச் சந்தித்த பிறகு ஒரு புதிய உத்வேகம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, டெல்லியில் அகில பாரதிய சிக்ஷா சமாஜம் என்ற அகில இந்திய கல்வி மாநாடு தொடங்கியது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த அகில இந்திய கல்வி மாநாடு நடத்தப்படுகிறது. பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கல்வி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, சுபாஸ் சர்க்கார், ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர், அங்கு வந்திருந்த பள்ளிக்குழந்தைகள், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியக் கண்காட்சியைப் பார்வையிட்டு, அதில் பங்கேற்ற குழந்தைகளைப் பாராட்டினார்.