கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோய்லாண்டி என்ற பகுதியில் நேற்று முன்தினம் காரில் பயணித்த புதிதாக திருமணமான முகமது ஸ்வாலிஹ் மற்றும் அவரது நண்பர்கள் மீது ஒரு கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
முகமது ஸ்வாலிஹ் தனது காதலியை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண்ணின் உறவினர்களும், பெற்றோரும் எதிர்த்தபோதும் பதிவாளர் அலுவலகத்தில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் ரவுடி கும்பலுடன் இணைந்து முகமதுவைத் தாக்க முடிவுசெய்தனர்.
இதற்காகத் திட்டமிட்டு நேற்று முன்தினம் (டிச. 03) முகமது தனது நண்பர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது பின்தொடர்ந்துள்ளனர். தக்க சமயத்தில் முகமது சென்ற காரை இடைமறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களிடமிருந்த ஆயுதங்களால் முகமதுவின் காரின் பின்புறம் உள்பட பல இடங்களை அடித்து நொறுக்கியதுடன், கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இந்த ரவுடி கும்பலில் இருந்த முகமது மனைவியின் மாமாக்களான கபீரும், மன்சூரும் முகமது ஸ்வாலிஹை வெட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோய்லாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.