ஆன் பிராங்க் இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு யூதச் சிறுமி. இவர் தன்னுடைய குடும்பத்துடன் நெதர்லாந்தில் வசித்து வந்தார். இரண்டாம் உலகபோரின் போது ஜெர்மனியில் நாசிப்படைகளால் யூதர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு வந்தனர். இதனால் ஆன் ப்ராங்கின் குடும்பம் அவரது தந்தையின் சொந்த அலுவலக ரகசிய அறையிலேயே மறைந்து வாழும் நிலை ஏற்பட்டது.
அப்போது 13 வயது சிறுமியாக இருந்த ஆன் ப்ராங்க் மற்ற சிறுவர்களைப் போல பள்ளிக்கு செல்வது, விளையாடுவது, இப்படி எதையும் செய்ய இயலவில்லை. இதனால் தன்னுடைய பொழுது போக்கிற்காகவும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் டைரி எழுத தொடங்கினார். ஆன் ப்ராங்க் தான் எழுதிய அந்த டைரிக்கு ”கிட்டி” என பெயர் வைத்து அதை தன்னுடைய நண்பனாக நிணைத்து தன்னுடைய தினசரி அனுபவங்களையும், மறைந்து வாழ்வதில் எதிர்கொண்ட சிக்கல்களையும் பதிவு செய்துள்ளார். இவர் எழுதிய டைரி குறிப்புகள் இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் கொல்லப்பட்டதை ஆவணப்படுத்தும் வகையில் இருந்ததால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆன் ப்ராங்க் மற்றும் அவருடைய குடும்பம் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை நெதர்லாந்தில் மறைந்து வாழ்ந்தனர். ஆன் ப்ராங்க் டைரி எழுதிய போது அவருடைய வயது 13-15. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருக்கும் இடம் ஜெர்மனியில் நாசிப்படைகளால் கண்டுபிடிக்கப்பட்டு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஆன் ப்ராங்க் கொல்லப்பட்டார்.