டெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சிறியது முதல் பெரியது வரை ஏராளமான பணப் பரிவர்த்தனைகளுக்கு பலரும் யுபிஐ வசதியையே விரும்பி பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிலும் அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, யுபிஐ ஆட்டோ பே (UPI Autopay) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
யுபிஐ ஆட்டோ பே என்பது, இஎம்ஐ, மின்கட்டணம் உள்ளிட்ட சந்தா அடிப்படையிலான கட்டணங்களை கால தாமதம் இல்லாமல் செலுத்த பயன்படுகிறது. நாம் மாதந்தோறும் செலுத்த வேண்டிய கட்டணங்களின் விவரங்களை அதில் செட் செய்து வைத்துவிட்டால், குறிப்பிட்ட தேதியில் கட்டணங்கள் தானாகவே செலுத்தப்பட்டுவிடும். காலதாமதம் ஏற்பட்டு, அபராதம் செலுத்துவது போன்ற சூழல்களைத் தவிர்க்க இந்த அப்டேட் பயனுள்ளதாக இருக்கிறது.
யுபிஐ 2.0-வாக பார்க்கப்படும் இந்த ஆட்டோ பே முறைக்கு, நேஷனல் பேமென்ட் கார்ப்ரேஷன் (National Payments Corporation of India) கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்தது. அதன்படி அனைத்து வகையான யுபிஐ ஆப்களிலும் இந்த ஆட்டோ பே முறையைப் பயன்படுத்த முடியும்.