உலக அளவில் பிரபலமான 20ஆம் நூற்றாண்டில் யாராலும் சாய்க்க முடியாத இந்திய மல்யுத்த வீரர் காமாவின் பிறந்தநாள் இன்று (மே. 22) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் அதன் பக்கத்தில் காமாவிற்காக டூடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு முக்கியமான நாள் மற்றும் முக்கியமான பிரபலங்களை பெருமைப்படுத்தும் விதமாக டூடல் வெளியிடும் கூகுள் நிறுவனம் இன்று காமாவிற்காக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1878 இல் பிறந்து உலகம் முழுவதும் யாராலும் வெல்ல முடியாத ஒரு மல்யுத்த வீரர்தான் குலாம் முகமது பக்ஷ் பட் ஆவார். இவரை மக்கள் ‘தி கிரேட் காமா’ என்றழைத்தனர். பஞ்சாப்பின் பிரபல பயில்வான் குடும்பத்தில் 1878 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி பிறந்த காமா சிறுவயதிலேயே மல்யுத்தத்தில் சிறந்து விளங்கினார். இதனால் ஜோத்பூர் மன்னனின் பிரியமான மல்யுத்த வீரராக திகழ்ந்தார். மல்யுத்தத்தில் அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து போன்ற நாடுகளின் வீரர்களை எளிதாக வென்றார். இதனால் இவர் பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்பட்டார்.