ஐதராபாத் :ஆளப் போறான் தமிழன் என்ற நடிகர் விஜய நடிப்பில் உருவான பாடல் வரிகளுக்கு முன்னூதாரணமாக திகழ்பவர்களின் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையும் ஒருவர். தற்போதைய காலக் கட்டத்தில் கூகுள் வழங்கும் தேடுபொறி சேவைகளை நாம் வேறெங்கும் சென்று பெறுவது என்பது கடினமான ஒன்று எனக் கூறலாம்.
அப்படி இணைய உலகத்தை ஆண்டு ஆட்டிப் படைத்து கொண்டு இருக்கும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ஒரு தமிழர் இருப்பது, அனைத்து தமிழர்களுக்கும் பெருமையே. உலகம் மெச்சும் அளவுக்கு தான் உயர்ந்தாலும், தான் இந்த இடத்திற்கு உயர தன்னில் பாதியான தன் மனைவியே காரணம் என்கிறார் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை.
அப்படி மனைவி அஞ்சலி பிச்சை குறித்து சுந்தர் பிச்சை உதிர்த்த வார்த்தைகள், "நான் இந்த நிலைக்கு வந்ததற்கு அஞ்சலி தான் காரணம். நாங்கள் முதலில் ஐஐடி காரக்பூரில் சந்தித்தோம். அடிப்படையில், நான் ஒரு Introvert. ஆனால் அவள் தான் என்னை ஒரு துடிப்பு மிக்க மனிதனாக மாற்றினாள்.
அவளிடம் என் காதலை கூறும் போது இருந்த பதற்றத்தை இன்னும் என்னால் உணர முடிகிறது. அஞ்சலியிடம் காதலை தெரிவிப்பதை விட கூகுளில் இந்த பதவியை பெறுவது எளிது என்று உணர்ந்தேன். என் காதலை ஏற்றுக் கொள்வது அவளின் மகத்துவம். அப்போது நான் பொருளாதார ரீதியாக செட்டில் ஆகவில்லை என்றாலும், அவள் என்னை நம்பினாள்.
பி.டெக் படிப்பிற்குப் பிறகு, முதுகலை பட்டம் படிக்க நான் அமெரிக்கா சென்றேன். அவள் Accenture நிறுவனத்தில் வணிக ஆய்வாளராக பணியில் சேர்ந்தாள். அப்போது அமெரிக்காவில் இருந்து தொலைபேசியில் அழைப்பது மிகவும் கடினம். அவ்வளவு விலை உயர்ந்தது. என்னிடம் பணம் எதுவும் இல்லை.
ஆறு மாதங்களாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், அந்த தூரம் எங்களை நெருக்கமாக்கியது. நான் வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவளுடைய பெற்றோரின் அனுமதியுடன் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். என் வாழ்க்கையின் ஒவ்வொரு முக்கியமான சூழ்நிலையிலும் அஞ்சலி முக்கிய பங்கு வகித்தார்.
பல முக்கியமான விஷயங்களில் எனக்கு சந்தேகம் ஏற்படும் போது, அவர் எனது ஆலோசகராக இருந்து உடனடி தீர்வுகளை வழங்கி உள்ளார். மைக்ரோசாப்ட், யாகூ மற்றும் ட்விட்டரில் இருந்து கூட எனக்கு வேலைக்கான அழைப்புகள் வந்தபோது என்னால் முடிவெடுக்க முடியவில்லை. அவள் என்னை கூகுளில் இருந்து வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தினாள்.
அதனால் தான் நான் தற்போது இந்த நிலையில் இருக்கிறேன். தன்னம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்தும் அவளிடமிருந்து நான் எப்போதும் புதிதானவற்றை மட்டுமே கற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் மிகவும் முக்கியம். நாங்கள் அமெரிக்கா வந்த பிறகு, ஸ்டான்போர்டில் முதுகலை படித்தேன்.
வீட்டு பொறுப்புகள் மற்றும் இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்வதுடன், Intuit நிறுவனத்தில் வணிக இயக்க மேலாளராகவும் அவர் சிறப்பாகச் செயல்பட்டார். வேலை மற்றும் குடும்பத்தை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதை அவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளலாம். மற்றவர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு உதவுவதில் அஞ்சலிக்கு விருப்பம் அதிகம். பல தொண்டு நிறுவனங்களின் சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்தியா - அமெரிக்கா அறக்கட்டளை நிறுவனங்களுக்கும் நன்கொடை அளித்து வருகிறார். இந்தியாவில் கரோனா பாதித்தவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஒரு கோடியே 20 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்க வேண்டும் என அஞ்சலி விருப்பம் கொண்டு இருந்தார். மேலும் The Bay Area Discovery Museum என்ற அமைப்பின் மூலம் ஏழ்மையில் வாடும் குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவி வருகிறார்" என சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
இதையும் படிங்க :புதிய நாடாளுமன்றம் மே இறுதியில் திறப்பு? பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!