ஜபல்பூர்:மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர்(Jabalpur) மாவட்டத்தில் உள்ள சாபுரா பிதோனி என்ற இடத்தில் கேஸ்(LPG) ஏற்றி வந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இது குறித்து மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பு அலுவலர் கூறுகையில், “இந்த சம்பவத்தில் சரக்கு ரயில் இறக்குவதற்கு வைக்கப்பட்டிருந்தபோது தடம் புரண்டது. நேற்று (ஜூன் 6) இரவு கேஸ் ஏற்றி வந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் இறக்குவதற்காக வைக்கப்பட்டிருந்தபோது தடம் புரண்டது.
இந்த விபத்தின்போது ரயிலின் மெயின் லைன் இயக்கத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை. எனவே, மெயின் லைனில் ரயில்கள் இயக்கம் வழக்கம்போல் உள்ளது. இன்று (ஜூன் 7) காலை முதல் ரயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும். மேலும், விபத்து குறித்த தகவல்கள் மற்றும் சீரமைப்புப் பணிகளின் நிலவரம் அடுத்தடுத்து வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தின் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில், மேற்குவங்க மாநிலத்தின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.