ஹைதராபாத்: தங்கத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியால், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக சீனா, நேபாளம், பூடான், ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் அதிகளவில் கடத்தப்படுவதாக தெரிகிறது. விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தங்கத்தை கடத்தி வரும் பலர் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. அதேநேரம் ரயில் மூலமாகவும் தங்கத்தை கடத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
மேற்வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து செகந்திராபாத்துக்கு வரும் ஃபலாக் நுமா விரைவு ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 8ம் தேதி, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் போலீசார், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணி ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்த போது 2.314 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.32 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.