மலப்புரம்:கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கரிப்பூர் விமான நிலையத்தில், விமான நிறுவன ஊழியர்களின் உதவியுடன் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மூலம் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூத்த செயல் அலுவலர் சஜித் ரஹ்மான், துபாயிலிருந்து வந்த வயநாட்டைச் சேர்ந்த அஸ்கராலி என்ற பயணியின் பெட்டியை வெளியே கொண்டு செல்ல முயன்றார். இதனை சிசிடிவியில் பார்த்த சுங்கத்துறை அலுவலர்கள், அவரைப் பிடித்து விசாரித்தனர்.
இதனிடையே அந்தப் பயணி பெட்டியை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். பின்னர் பெட்டியை கைப்பற்றிய சுங்கத்துறை அலுவலர்கள் அதனைத்திறந்து பார்த்தபோது, அதில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கம் கடத்த உதவிய சஜித் ரஹ்மான் மற்றும் வாடிக்கையாளர் சேவை முகவர் முகமது சாமில் ஆகியோரைக் கைது செய்த சுங்கத்துறையினர், அவர்கள் கடத்த முயன்ற இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கலவையை பறிமுதல் செய்தனர்.