திருவனந்தபுரம்: வளைகுடா நாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முதன்மை குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷ் (Swapna Suresh) கருதப்படுகிறார். இந்த வழக்கில், எர்ணாக்குளம் மாஜிஸ்திரேட் முன்பு நேற்று (ஜூன்7) ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்வப்னா, “இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். 2016ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் துபாய் சென்றபோது எனக்கு சிவசங்கர் அறிமுகமானார்.
அப்போது கேரளத்தில் பேக் ஒன்றை மறந்துவிட்டுவிட்டு வந்ததாகவும், அதனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் துபாய்க்கு அனுப்பிவைக்க முடியுமா? என்று கேட்டுக்கொண்டார். நானும் அந்தப் பேக்-ஐ துபாய்க்கு அனுப்பிவைக்க விமான நிலைய குடிமை அலுவலர்களை தொடர்புக் கொண்டேன். அப்போது, அங்கு ஸ்கேனிங்கில் செய்யப்பட்டத்தில் அந்தப் பேக்கில் பணம் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, தூதர அலுவலர்கள் வாயிலாக பினராய் விஜயன் வீட்டுக்கு பிரியாணி செய்யும் பொருள்கள் என சில பாத்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அந்தப் பாத்திர பார்சல்களில், உலோக பொருள்கள் சில இருந்தன. இந்தத் தங்கக் கடத்தில் விவகாரத்தில் முதலமைச்சர் பினராய் விஜயன், முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர், பினராய் விஜயனின் மனைவி கமலா மற்றும் அவர்களது மகள் வீணா ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளனர். இது தவிர அமைச்சர் கே.டி. ஜலீல், முதலமைச்சரின் தனிச்செயலர் சி.எம். ரவீந்திரன் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது” என்றார்.