சென்னை :அண்மைக் காலமாக தங்கம் விலை அதிகரித்து உச்சம் தொட்டு காணப்பட்ட நிலையில் இன்று (ஏப்.6) சற்று விலை குறைந்து நிம்மதி அடையச் செய்து உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் போக்கு காட்டி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல், அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலை, அதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்க சூழல் உள்ளிட்ட காரணிகளால் தங்கத்தின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.
அமெரிக்காவின் வங்கிகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து உள்ளன. அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் ஆகிய வங்கிகள் திவாலாகின. இரு வங்கிகள் திவாலானதை அடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்கர்கள் தங்களது முதலீடுகளை வேறு பக்கம் திருப்பி உள்ளனர்.
தங்கத்தின் மீது அதிகப்படியிலான முதலீடுகள் காரணமாக சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ஏற்றம் கண்டு வந்தது. நேற்று முன்தினம் (ஏப்.04) சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2020 அமெரிக்க டாலர்கள் வரை விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் அது தற்போது சற்று குறைந்து உள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 11 அமெரிக்கா டாலர்களாக விலை குறைந்தது. இதனால் இந்திய சந்தையில் தங்கத்தின் மீதான விலை உயர்வு தற்காலிகமாக தடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ ரேட் வட்டி விகிதம் உயர்த்தப்படாதது கூட தங்கம் விலை குறைவுக்கு காரணம் என்று கூறலாம்.