சென்னை :இதுவரை இல்லாத அளவில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 520ஐ தாண்டி புது உச்சம் தொட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் போக்கு காட்டி வருகிறது. தங்க நகைகளுக்கு HUID என்ற 6 இலக்க எண் எழுத்து அடிப்படையிலான ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டது தான் விலையேற்றத்திற்கான காரணம் எனக் கூறப்பட்டாலும் அது மட்டுமே இந்த விண்ணை முட்டும் அளவிலான விலை உயர்வின் ஆதாரமா என்றால் உண்மை என்று கூற முடியாது.
சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல், அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலை, அதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்க சூழல் உள்ளிட்ட காரணிகள் கூட தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படக் காரணம் என்றும் கூட கூறலாம்.
அமெரிக்காவின் வங்கிகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து உள்ளன. அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் ஆகிய வங்கிகள் திவாலாகின. இரு வங்கிகள் திவாலானதை அடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்கர்கள் தங்களது முதலீடுகளை வேறு பக்கம் திருப்பி உள்ளனர்.
தங்கத்தின் மீது அதிகப்படியிலான முதலீடுகள் குவியத் தொடங்கிய உள்ளதால் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ஏற்றம் கண்டு உள்ளது. தற்போதை தங்கம் விலை உயர்வும் முன்னரே கணிக்கப்பட்ட ஒன்று தான். நேற்று (ஏப்.04) சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2020 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.