கர்நாடகா: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூரு, ஹாசன், ஷிவமோகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 21ஆம் தேதி மாலை பெங்களூருவில் பெருமழை கொட்டித் தீர்த்தது. குட்டஹள்ளி, கொட்டிகேபாளையா, புலிகேசி நகர், மஹாலட்சுமி லேஅவுட் உள்ளிட்டப் பகுதிகளில் அதிகளவு மழை பெய்தது. குறிப்பாக குட்டஹள்ளியில் 6.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.
இந்த கனமழையால் மொத்த நகரமும் வெள்ளக்காடாய் மாறின. சாலைகள், சுரங்க நடைபாதைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கர்நாடகாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை எட்டு பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. பெங்களூருவில் நேற்றும் கனமழை பெய்தது.
இந்த வெள்ளம் காரணமாக பெங்களூரு நகரம் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளன. சாலைகள் மற்றும் பொது இடங்களில் கழிவுகள் சேர்ந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. குப்பைகள், கழிவுகள், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நகைக் கடையில் புகுந்த வெள்ளம்:இந்த நிலையில், பெங்களூருவில் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் வெள்ளம் புகுந்ததில், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.