டெல்லி:இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரையை கட்டாயமாக்கியது. அந்த வகையில், நாட்டின் 256 மாவட்டங்களில் உள்ள மையங்கள் மூலம், தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தலான பொருள்கள் எச்யுஐடி (HUID) முத்திரையுடன் ஹால்மார்க் செய்யப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், மேலும் 32 புதிய மாவட்டங்களில் ஹால்மார்க் முத்திரை செய்யும் திட்டம் செயல்பட உள்ளது. இதன்படி தமிழ்நாட்டின் தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஹால்மார்க் மையங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்தில் தேர்வாகியுள்ள மாவட்டங்களின் பட்டியல் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) www.bis.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, கூடுதலாக தங்க நகை/கலைப்பொருள்களில் 20, 23, 24 ஆகிய மூன்று வகை காரட் அளவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் செய்யும் மையங்களில் எந்த ஒரு நுகர்வோரும் தங்களுடைய ஹால்மார்க் முத்திரையிடப்படாத தங்க நகைகளின் தூய்மையைப் பரிசோதிக்க முடியும். 4 பொருள்கள் வரையிலான தங்க நகைகளை பரிசோதிப்பதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.45 கட்டணமாக பெறப்படும்.
நுகர்வோரின் தங்க நகைகளை சோதனை செய்ய விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களின் பட்டியலை www.bis.gov.in இணையதளத்தில் அறியலாம். நுகர்வோர் வாங்கும் எச்யுஐடி எண்ணுடன் கூடிய ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையை, பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய பிஐஎஸ் கேர் (BIS CARE) செயலியில் 'verify HUID' ஐப் பயன்படுத்தி நுகர்வோரே சரிபார்க்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தொடர்ந்து 5 வது நாளாக தங்கம் விலை சரிவு