ஹைதராபாத்: தெலங்கானாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சிலரை ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களைத் தொடர்ந்து கோவாவில் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் 11 பேர் வெளிநாட்டினர். இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கோவாவை மையமாகக் கொண்ட அந்த கும்பல், தெலங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து கேளிக்கை கொண்டாட்டங்களுக்காக கோவா செல்லும் இளைஞர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்கின்றனர். அவர்கள் கோவாவை விட்டு சென்றாலும், இளைஞர்களை அடிமையாக்கும்வரை தொடர்ந்து போதைப்பொருளை விற்பனை செய்கின்றனர். அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறும் நேரத்தில், அவர்களை விற்பனையாளர்களாக மாற்றிவிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.