சித்ரதுர்கா (கர்நாடகா):கர்நாடக மாநிலத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சுசனா சேத் (39). இவர் தனது 4 வயது மகனுடன், கடந்த ஜனவரி 6ஆம் தேதி, வடக்கு கோவாவில் உள்ள கண்டோலிமில் உள்ள ஹோட்டலில் தங்கி உள்ளார்.
அவர் ஹோட்டலில் இருந்து செல்லும்போது அவரது மகன் உடன் இல்லாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணையத் துவங்கினர். பின்னர் அவர் கோவாவில் இருந்து கர்நாடகாவிற்கு காரில் செல்வதை அறிந்து, அந்த கார் ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு, சுசானா சேத்-ஐ கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் கைது செய்தனர்.
தொடர்து அவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடமிருந்த சூட்கேசில் மகனது உடல் இருந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் சிறுவனின் உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுவன் கொலை செய்யப்பட்டு 36 மணி நேரத்திற்கு மேல் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.