கோவா:உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து நான்கு மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து டேராடூனில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் அவர் தோல்வியுற்ற நிலையில், அவரே முதலமைச்சராக தொடர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோவா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தமுறை பாஜக தனித்து போட்டியிட்டு, 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றிக் கண்டது. இருப்பினும், பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது. தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்ததையடுத்து கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது.