டெல்லி: நிதிப் பற்றாக்குறை காரணமாக, விமான சேவையை நிறுத்திய நாளான மே மாதம் 3ஆம் தேதி மற்றும் அதற்குப் பிந்தைய பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற அனுமதி கோரி Go First நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (NCLT) அணுகி உள்ளது.
இதுதொடர்பாக, Go First நிறுவனத்தின் நிபுணர் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வின முன் ஒரு புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்து உள்ளார், "மே 3, 2023 முதல் விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பதாரரை அனுமதிக்க வேண்டும்" என்று அதில் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த மனுவை மகேந்திர கந்தேல்வால் மற்றும் ராகுல் பி பட்நாகர் ஆகியோர் அடங்கிய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய அமர்வு, திங்கள்கிழமை (ஜூலை 31ஆம் தேதி) விசாரிக்க உள்ளது. திவால் தீர்ப்பாயம் அனுமதித்தால், விமான பயணிகளுக்கு உதவும் வகையிலான கார்ப்பரேட் இன்சல்வன்சி ரெசல்யூஷன் பிராசஸ் (CIRP) அமைப்பு தொடங்கப்பட்ட பிறகு Go First விமான நிறுவனத்தில் சிக்கியிருக்கும் பணம் விமான பயணிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Go First விமான நிறுவனம், கடந்த மே மாதம் 3ஆம் தேதி, தனது விமான சேவைகளை நிறுத்தியது. பிராட் & விட்னியில் இருந்து எஞ்சின்கள் கிடைக்காததாலும், தொழில்நுட்ப சிக்கல்களாலும், விமான சேவைகளை இயக்க முடியாமல் போனதால், அதற்கு எதிராக கார்ப்பரேட் இன்சல்வன்சி ரெசல்யூஷன் பிராசஸ் (CIRP) அமைப்பு தொடங்குவதற்கு தானாக முன்வந்து அணுகியது.
கடந்த மே 10ஆம் தேதி, NCLT அமர்வு, தன்னார்வ திவால் தீர்மான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு Go First நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. இதுதொடர்பாக, NCLT அமர்வு, இந்த மாத தொடக்கத்தில் ஜூலை 3ஆம் தேதி ஒரு ஆலோசனையை வழங்கியது. திவால் மற்றும் திவால் கோட் (IBC) நடைமுறையின்படி பணத்தைத் திரும்பப் பெற ஆணையத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது.