குஜராத்: குஜராத் மாநிலம் காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாடு தொடங்கியது. முதலீட்டை கவரும் நோக்கிலும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதில், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத், மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, சர்பானந்த சோனோவால், முஞ்சப்பாரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஆயுஷ் துறைக்காக இதுபோன்ற முதலீட்டு உச்சி மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. ஆயுஷ் துறையிலும் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய நேரம் இது. உலகம் முழுவதும் ஆயுஷ் தயாரிப்புகளுக்கான தேவையும், வரவேற்பும் அதிகரித்து வருகிறது.
ஆயுஷ் மருந்துகள், வாசனை திரவியங்கள் உற்பத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடு வளர்ச்சியை கண்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய மருத்துவ முறை காரணமாக, அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை மேம்பட்டு வருகிறது. இந்த திறன் இந்தியா முழுவதும் உள்ளது. ஆயுர்வேதம், யுனானி, சித்தா சார்ந்த நலவாழ்வு மையங்கள் மிகவும் பெயர் பெற்றவையாக விளங்கக் கூடும். இவை மிகப்பெரிய வணிக முத்திரையாக (Brand) மாறக்கூடும்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாரம்பரிய மருத்துவத்தில் ஸ்டார்ட் அப் கலாசாரத்தை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போதைய காலம் யுனிகார்ன் நிறுவனங்களின் யுகமாக மாறியுள்ளது. 2022ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை இந்தியாவை சேர்ந்த 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் கிளப்பில் சேர்ந்துள்ளன" என்றும் தெரிவித்தார்.
மாநாட்டில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "ஆயுர்வேதம் மற்றும் பஞ்சகர்மா மருத்து சிகிச்சையில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த சிகிச்சை முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலவரம் நடந்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - ஒவைசி கடும் கண்டனம்