சிக்கமகளூரு: கர்நாடக மாநிலம் சோமனஹள்ளியைச் சேர்ந்த ரக்சிதா(17) என்ற கல்லூரி மாணவி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்திலிருந்து இறங்கும் போது தவறி விழுந்தார். பேருந்திலிருந்து இறங்கும்போது ஓட்டுநர் திடீரென பேருந்தின் வேகத்தை அதிகரித்ததால், மாணவி தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரக்சிதா, மூளைச்சாவு அடைந்தார். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் பொறுப்பின்மையால் மகள் உயிரிழந்துவிட்டதாக பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறினர். அந்த சோகத்திலும் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து இளம்பெண்ணின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து எடுக்கப்பட்டது. மாணவியின் இதயத்தை ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை ஆம்புலன்ஸ் மூலம் மங்களூருக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் சிக்கமகளூரில் இருந்து முடிகெரே, கொட்டிகெஹாரா, சார்மாடி காட், பெல்தங்கடி வழியாக மங்களூர் சென்றடைந்தது. ஆம்புலன்ஸ் செல்ல ஜீரோ டிராபிக் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ரக்சிதாவின் கண்கள் சிக்கமகளூரு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கால்நடைகளை தாக்கி புலியை பிடித்த வனத்துறையினர்...