காந்தி நகர்(குஜராத்):பல்வேறு நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குஜராத் மற்றும் ஒடிசாவில் ஒமைக்ரான் வைரஸின் மாறுபாடான கரோனா பி.எஃப். 7 திரிபு 3 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில் கரோனா கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளிடம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் சீனாவில் இருந்து வந்த பெண் உள்பட இருவருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாவ்நகர் பகுதியில் நடத்தப்பட்ட மெகா கரோனா பரிசோதனை முகாமில் 34 வயதான ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதாகவும், அவர் அண்மையில் சீனாவில் இருந்து திரும்பியதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.