ஜம்மு: காங்கிரஸ் கட்சின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத், கடந்த மாதம் காங்கிரசிலிருந்து விலகினார். 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த அவர், காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் அவர் பாஜகவில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், தான் தனி அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக ஆசாத் அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் காங்கிரசிலிருந்து விலகினர்.
இந்த நிலையில், தனது புதிய கட்சியின் பெயர் "ஜனநாயக ஆசாத் கட்சி" என்று குலாம் நபி ஆசாத் அறிவித்தார். நீலம், வெள்ளை, மஞ்சள் நிறத்திலான தனது கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "ஜனநாயக ஆசாத் கட்சியை இன்று முதல் தொடங்குகிறேன். ஜனநாயகம், பேச்சு-சிந்தனை சுதந்திரம் உள்ளிட்டவற்றிற்கான அடையாளமாக இக்கட்சி விளங்கும். மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்போம். ஜனநாயக ஆசாத் கட்சிக்கு மற்ற எந்த கட்சியுடனும் போட்டி இல்லை. ஜம்மு காஷ்மீரில் அமைதியையும், இயல்பு நிலையையும் நிலைநாட்டுவதிலேயே கவனம் செலுத்துவோம்" என்று தெரிவித்தார்.