உத்தரகாண்டில் குதிரை நூலகம் பற்றிய சிறப்பு தொகுப்பு நைனிடால்:உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் கிராமப் பகுதியில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி அறிவு ஊட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள நடமாடும் குதிரை நூலகத்திற்கு அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுதியான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த முயற்சி அங்குள்ள குழந்தைகள் மத்தியில் கல்வியை வளர்ப்பது மட்டும் இன்றி, சமூக ஒற்றுமை சிந்தனையையும் விதைத்து வருகிறது. இங்கு அமைதி காக்க வேண்டும் என்ற வரவேற்புடன் உள் நுழையும் ஒரு அறை, அடுக்கு அடுக்காகப் புத்தகங்கள், தேடி எடுத்து ஒரு இருக்கையில் அமர்ந்து புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பி அதன் மணத்தை சுவாசித்துப் படித்தால் மட்டும்தான் அது நூலகமா?
எங்கள் குழந்தைகள் அப்படி ஒரு வாய்ப்பைப் பெற முடியவில்லை என்றால் என்ன, காடு, மலைகளைத் தாண்டி குதிரையில் புத்தகங்களை எடுத்துச் சென்று படிக்க வைப்போம் என்கிறார்கள், உள்ளூர் இளைஞர்களான சுபம் மற்றும் சுபாஷ்.
இவர்கள் இருவரும் தங்கள் நண்பர்கள் உதவியுடன் குதிரையின் மீது புத்தகங்களை எடுத்துச் சென்று தொலைதூரக் கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு கல்வி வழங்கி வருகின்றனர். இவர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், குழந்தைகளும் ஆர்வத்துடன் கல்வி கற்று வருகின்றனர்.
இதையும் படிங்க:Rahul Gandhi: அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட பணம் யாருடையது? - ராகுல் காந்தி கேள்வி
பொதுவாகவே, உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் மலைப்பகுதி மழை மற்றும் பனியின் காரணமாக என்றும் ஈரத்தின் தன்மை மாறாமல் இருக்கும். இதனால் அங்குள்ள குழந்தைகள் பள்ளி சென்று கல்வி கற்பதில் அடிக்கடி தடை ஏற்படும். இயற்கையின் இயல்பை மாற்றி அமைக்க முடியாத சுபம் மற்றும் சுபாஷ் ஆகிய இருவரும் குதிரையில் புத்தகங்களை ஏற்றி, கிராமங்கள் வாரியாக நடந்தே சென்று கற்றலுக்கும், சூழ்நிலைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கத் திட்டமிட்டனர்.
இவர்களின் இந்த முயற்சியைப் பார்த்த அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள், நாள்தோறும் தங்கள் குதிரைகளை மாற்றி மாற்றி வழங்கி இளைஞர்களின் முயற்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்கினர். அதேபோல், அங்குள்ள கல்வியாளர்கள் அந்த குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க குதிரை நூலகத்திற்கான தங்கள் அர்ப்பணிப்பை அளித்து வருகின்றனர்.
கல்வி என்பது வெறும் அறிவும், ஆடம்பரமும் மட்டும் அல்ல. அதையும் தாண்டி சமூகத்திற்கான அடிப்படை உரிமை என்றே கூறலாம். அதை பள்ளிகளிலும், நூலகங்களிலும் இருந்துதான் கற்க வேண்டும் என்று இல்லை, அந்த சூழல் இல்லாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு குதிரை நூலகம் போன்ற ஒரு கூட்டு முயற்சியே போதுமானதுதான்.
இதையும் படிங்க:குஷி படத்தால் குஷியாக இருக்கும் விஜய் தேவரகொண்டா.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ!