காசியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆன்லைன் கேமிங் செயலிகள் மூலம் சிறுவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக அண்மையில் புகார் எழுந்தது. குறிப்பாக ஜெயின் மதத்தைச் சேர்ந்த பதின் பருவ சிறுவனை சிலர் ஆன்லைன் கேமிங் ஆப் மூலம் மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், காசியாபாத், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்து சிறுவர்கள் சிலர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டில் தோற்கும்போது, இஸ்லாமிய மதத்தின் போதனைகளைப் படித்தால் வெற்றி பெறலாம் என்று கூறி, சிறுவர்களை வெற்றி பெறச் செய்து, பிறகு மதமாற்றம் செய்வதாக போலீசார் கூறினர்.
இந்த வழக்கில் காசியாபாத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஷாநவாஸ் கான் என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் கடந்த 12ஆம் தேதி மகாராஷ்ட்ராவின் தானே மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் போலீசார் ஷாநவாஸ் கானை ட்ரான்சிட் ரிமாண்டில் காசியாபாத் அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்களுடன் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக ஷாநவாஸ் கான் தொடர்பு கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் தகவல்படி, “ஷாநவாஸ் கானின் மடிக்கணினியில் சில மின்னஞ்சல் முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவை பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடையது. இந்த மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவர் வீடியோ லிங்குகளை பகிர்ந்துள்ளார். அதேபோல், பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் சுமார் 30 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.