டெல்லி:காதலர் தினம் நாளை(பிப்.14) கொண்டாடப்படவுள்ளது. ஏராளமான காதல் ஜோடிகளும், ஒருதலைக் காதலர்களும் தங்களது அன்புக்குரியவர்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், காதலர் தின டேட்டிங்கிற்கு சிறப்பாக தயாராவதற்கான சில டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை பார்க்கலாம்...
பொருத்தமான ஆடை: காதலர் தினத்தில் உங்களது இணையரை இம்ப்ரஸ் செய்வதற்காக அழகாக உடை உடுத்தும்படி பலரும் அறிவுரை கொடுப்பார்கள். ஆனால், கண்ணை கவரும்படி உடை உடுத்துவதை விட, நமக்கு செளகரியமாகவும், தன்னம்பிக்கை ஏற்படும் வகையிலும் உடை உடுத்துவது சிறந்தது. நடக்க, உட்கார, நடனமாட என அனைத்திற்கும் வசதியாக இருக்கும் வகையிலான ஆடையை தேர்வு செய்யுங்கள்.
ஆண்கள் ஃபிட்டான கேசுவல் ஆடைகளைத் தேர்வு செய்யலாம். அதேபோல் பெண்கள் தங்களுக்கு செளகரியமாக இருக்கும் வகையிலான கேசுவல் ஆடைகளைத் தேர்வு செய்யலாம். பெண்கள் கருப்பு அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வு செய்தால், அது காதலர் தின இரவில் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும்.
வாசனை திரவியம்: காதலர் தின டேட்டிங்கில் உங்கள் இணையை கவர்ந்திழுக்கும் வகையில் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தலாம். பல மணி நேரத்திற்கு நீடித்திருக்கும் வகையிலான வாசனை திரவியங்களைப் பயன்படுத்துங்கள். இந்த வாசனை உங்களையும் சிறப்பாக உணர வைக்கும். இந்த வாசனை திரவியங்களை கழுத்து, மணிக்கட்டு, காதுகளின் பின்புறம் உள்ளிட்ட பல்ஸ் பாயின்ட்களில் போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல் வாசனைத் திரவியங்களை அதிகளவுக்கு பயன்படுத்தக்கூடாது.