ராஜஸ்தான்:ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தது முதலே அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, பைலட் கெலாட் அரசுக்கு தொடர்ந்து தலைவலி கொடுத்து வருகிறார்.
கடந்த பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பாக கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வரும் சச்சின் பைலட், இந்த ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார். பாஜக முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக அசோக் கெலாட் செயல்படுவதாக, சச்சின் பைலட் அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக ஐந்து நாட்கள் நடைபயணத்தையும் சச்சின் பைலட் மேற்கொண்டார். அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையில் 125 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டே பைலட் இந்த யாத்திரையை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு சச்சின் பைலட் முக்கிய பங்காற்றினார். முதலமைச்சர் பதவி கிடைக்கும் என அவர் எதிர்பார்த்த நிலையில், பைலட்டிற்கு துணை முதலமைச்சர் பதவி மட்டுமே கிடைத்தது. பிறகு அதுவும் நீடிக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பைலட் தீயாக வேலை செய்து வருகிறார்.
இந்த சூழலில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்றியது போல, ராஜஸ்தான் தேர்தலிலும் இணைந்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. இதனால், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறது.
அதன்படி, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நாளை(மே.26) மாலை 4 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடசரா மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.