டெல்லி : இந்திய விமானப் படைக்கு போர் விமானங்களுக்கான என்ஜின் தயாரிக்கும் பணியில் அமெரிக்காவின் விமான கட்டுமான நிறுவனமான ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 5 நாட்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இந்திய விமானப் படைக்கு இலகு ரக போர் விமான, Mk-II மற்றும் Tejas ஆகிய விமானங்களுக்கான என்ஜின் இந்தியாவில் தயாரிக்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் F414 ரக விமானங்களின் என்ஜின்கள் இந்தியாவில் உருவாக்கப்பட உள்ளதாக அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், இந்திய விமான படைக்கு இலகு ரக விமானம், Mk-II, Tejas ஆகிய போர் விமானங்களுக்கான என்ஜின்கள் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு தேவையான ஏற்றுமதி அங்கீகாரத்தை பெற அமெரிக்க அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என கூறப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் இதன் மூலம் இந்தியா மற்றும் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் நீண்ட கால ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் எச் லாரன்ஸ் தெரிவித்து உள்ளார்.
F414 ரக என்ஜின்கள் ஒப்பிட முடியாதவை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முக்கியமான பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நன்மைகளை வழங்கும் என்றும் உயர்தர என்ஜின்களை உற்பத்தி செய்ய தங்களது கூட்டாளி நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க :அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி.. இத முதல்ல படிங்க!