டெல்லி:சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவ் இறுதியாகச் சென்ற இடம் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் ஆகும். இதையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தானில் உள்ள அந்த குருத்வாராவுக்குச் செல்ல நேற்று (நவ.20) கர்தார்பூர் நடைபாதையை கடந்து பாகிஸ்தான் சென்றடைந்தார்.
வலுக்கும் சர்ச்சை
இந்நிலையில் செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளித்த மறுத்த அவர், தற்போது வேண்டாம் என்றும் குருத்வார் சென்று திரும்பும்போது தான் பேசுவதாகவும் கூறினார். தொடர்ந்து பாகிஸ்தான் சென்றடைந்ததும், 'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது சகோதரர் போன்றவர்' எனக் கூறியுள்ளார்.
இதற்கு, பாஜக, ஆம் ஆத்மி கட்சி தரப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், பாஜக மக்களவை உறுப்பினரும், கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீரும் சித்துவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஏசி அறையில் அமர்ந்து பேசுவது எளிது
இதுகுறித்து கம்பீர், "நவ்ஜோத் சிங் சித்து கண்டிப்பாக தனது பிள்ளைகளை எல்லைக்கு அனுப்ப வேண்டும். அவரின் குழந்தைகள் ராணுவத்தில் இருந்தால் இம்ரான் கானை தனது அண்ணன் என்று அவர் பேசுவாரா?" எனக் கூறியுள்ளார்.
மேலும், "சித்துவின் இதைவிட வெட்கக்கேடான அறிக்கை வேறு இருக்க முடியாது. பாகிஸ்தான் ராணுவத் தளபதி பாஜ்வாவை கட்டிப்பிடித்தது, கர்தார்பூர் சாஹிப் சென்று இம்ரான் கானை தனது மூத்த சகோதரர் என்று அழைப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரில் 40 பொதுமக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கவில்லை. இந்தியாவை காக்க நினைக்கும் மக்களுக்கு எதிராக அவர் இருக்கிறார்.கேப்டன் அமரீந்தர் சிங் இந்தியாவை காக்க நினைத்த போது, நாட்டைப் பற்றி பேசும் போது அவர் ஒத்துழைக்கவில்லை. இதை விட வெட்கக்கேடு வேறு என்ன வேண்டும்?
ஏசி அறைகளில் உட்கார்ந்துகொண்டு அல்லது கர்தார்பூர் சாஹிப் சென்று பேசுவது மிகவும் எளிது. நாடுதான் முதன்மையானது, அரசியல் அல்ல" எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆர்யன் கான் வழக்கில் முதன்மை ஆதாரம் இல்லை' - மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் வெளியீடு