டெல்லி:முதலிட்டாளர்கள் நலன் மற்றும் சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக பொது வெளியீட்டை திரும்பப் பெற்றதாக கவுதம் அதானி தெரிவித்தூள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் தொடர்பாக வெளியிட்ட ஆய்வு அறிக்கை, பங்கு சந்தையில் பெரும் எதிரொலிப்பை ஏற்படுத்தின.
வரலாறு காணாத அளவில் அதானி குழும பங்குகளின் மதிப்பு சரிந்தன. உச்சத்தில் இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ஒரு வாரத்தில் தலை கீழ் நிலைமையாக மாறின. மேலும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் 75 பில்லியன் டாலர்களுக்கு கீழ் இறங்கியது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்திற்கு அதானி தள்ளப்பட்டார்.
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் 7 லட்சம் கோடி ரூபாய் வரை சரிவை சந்தித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட எஃப்.பி.ஓ. பங்கு வெளியிடுகளை வெளியிட்ட அதானி குழுமம் அதனை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பல்வேறு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்ட போதும், எஃப்.பி.ஓ. பங்கு வெளியிட்டை திரும்பப் பெறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் பணம் செலுத்திய முதலிட்டாளர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பி செலுத்தப்படும் என அதானி குழுமம் கூறியுள்ளது.
இந்நிலையில், பங்கு பொது வெளியீடு வாபஸ் குறித்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி விளக்கம் அளித்துள்ளார். ஏறத்தாழ 4 நிமிடங்கள் அதானி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், முதலிட்டாளர்களின் நலன் கருதியே எஃப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்பப் பெற்றதாக விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதைய சந்தை ஏற்ற இறக்க சூழலில் எஃப்.பி.ஓ.வை தொடருவது உகந்தது அல்ல என நிர்வாகக் குழு முடிவு எடுத்திருப்பதாக வீடியோவில் அவர் கூறியுள்ளார். ஒரு தொழில்முனைவோராக தான் மேற்கொண்டு வரும் 40 ஆண்டுகால பயணத்தில் பங்குதாரர்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் தொடர்ந்து தனக்கு கிடைத்து வருவதாகவும், அவர்களின் நலன்தான் தனக்கு முக்கியம் என்றும் மற்றதெல்லாம் இரண்டாம்பட்சமே என்றும் அதானி குறிப்பிட்டுள்ளார்.
தனது வாழ்வில் சிறிய அளவிலாவது சாதித்திருந்தால் அதற்கு முதலீட்டாளர்கள் தன் மீது வைத்த நம்பிக்கைதான் காரணம் என அதானி கூறியுள்ளார். எஃப்.பி.ஓ தொடர்பான இந்த முடிவு, தற்போது தாங்கள் மேற்கொண்டு வரும் தொழில்களையோ, மேற்கொள்ள உள்ள திட்டங்களையோ பாதிக்காது என்று அதானி கூறினார்.
அதானி நிறுவனத்தின் அடித்தளம் வலுவாக உள்ளதாகவும், ஏற்கனவே திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டவாறு முடிப்பதில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார். சந்தை நிலையானதாக மாறிய பிறகு, முதலீடு சார்ந்த சந்தை வியூகம் குறித்து மறு ஆய்வு செய்து பங்கு பொது வெளியீடு குறித்து முடிவு எடுக்கப்படும் என கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அதானி VS ஹிண்டன்பர்க் - நடந்தது என்ன?